சென்னை, ஜூன் 12
சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை.
இந்த நூற்றாண்டில் மனிதகுலம் சந்தித்திராத பேரவலம் நம் உடன்பிறவா உறவுகளான ஈழத்தமிழர்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. இந்திய ஒன்றியம் உட்பட உலகத்தின் பல வல்லரசு நாடுகள் இணைந்து நின்று நடத்திய அந்த இறுதி யுத்தத்தை தடுத்து நிறுத்த முத்துக்குமார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் தலையில் எண்ணெயை ஊற்றித் தங்களை எரித்துக் கொண்டு சாம்பலாகியும் கூட, தமிழைத் தாய் மொழியாக கொண்டதினாலேயே ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு கூட்டம் கூட்டமாக மாண்டு போனார்கள். அதிலிருந்தும் தப்பி இந்தியா எங்கள் தந்தையர் நாடு என்கிற உரிமையோடு வாழ ஓடிவந்தவர்களை, ஏதேதோ காரணங்களைச் சொல்லி இழுத்து வந்து சிங்கள அரசு நடத்துகின்ற கொடூர வதை முகாம்களை பொன்றே தமிழ் நாட்டின் திருச்சியில் அடைத்து வைத்து இன்றுவரை சித்திரவதை செய்வது மிகுந்த வேதனையைத் தருகிறது.
எந்தவித காரணங்களும் இன்றி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்திருக்கின்ற சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் 54 பேர் தங்களை விடுதலை செய்யக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஐந்தாவது நாளாக தொடரும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரிகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றதாகவும், சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்குள் தங்கியிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களும் கியூ பிரிவு போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக எந்தவித குற்றப்பத்திரிகையும் இதுவரை தாக்கல் செய்யாது காலவரையின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்களின் விடுதலை தொடர்பாக பல போராட்டங்கள் நடத்தியும் எந்த விதமான தீர்வுகளும் கிடைக்கப் பெறாத நிலையில்தான் ஐந்தாவது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் நான் தொடர்பெடுத்து பேசியபோதெல்லாம் எங்களின் கையில் ஒன்றுமில்லை அரசாங்கம் முடிவெடுத்து அறிவித்தால் நாங்கள் விடுதலை செய்துவிடுவோம் என்று முடித்து விடுவார்கள். ஆனால் இதுவரை இது தொடர்பான எந்த விதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசும் மேற்கொள்ளவில்லை. மாறாக கியூ பிரிவு போலீசார், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு இருக்கும் ஈழத்தமிழர்கள் மீது தமது அதிகாரங்களை பயன்படுத்தி அடித்து சித்தரவதை செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும், சிறப்பு முகாமுக்கு வரும் பொருட்கள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்களது குடும்பம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதோடு மட்டுமல்லாமல் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்க நேர்வதால் தாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என்று கதறி வெளிவந்திருக்கின்றகாட்சி காணொளி நெஞ்சை பதற வைக்கிறது.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான் அதற்கு தனித்தமிழீழமே தீர்வு என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் இயற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வழியில் நின்று ஆட்சி செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இப்பிரச சினையில் உடனடியாகத் தலையிட்டு நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து அவர்கள் தங்களின் குடும்பத்துடன் சென்று நிம்மதியோடு வாழ அனுமதிக்க வேண்டுமெனவும், திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டுமெனவும் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.