சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு: சோதனைகளை அதிகரிக்க வேண்டும்!

Filed under: சென்னை |

 சென்னை, ஏப்ரல் 29

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், நேற்று ஒரு நாளில் மட்டும் 103 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. ஒட்டு மொத்த தமிழகத்திலும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சென்னையில் பரவல் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் நேற்று ஒரு நாளில் மட்டும் 121 பாதிக்கப்பட்டுள்ளனர்.   அவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 7-ஆம் தேதி தமிழகத்தின் முதன்முறையாக கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்போது தான் மிக அதிகமாக ஒரே நாளில் 121 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிலும் 103 பேர், அதாவது 85.12 விழுக்காட்டினர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673-ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டாவது ஊரடங்கு தொடங்கிய ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான இரு வாரங்களில் தமிழகத்தில் 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேல், அதாவது 462 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதல் ஊரடங்கு காலத்துடன் ஒப்பிடும் போது இரண்டாவது  ஊரடங்கு காலத்தில் நேற்று வரை ஒட்டுமொத்த தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் அளவு 70%  மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் சென்னையில் இந்த அளவு 218% அதிகரித்துள்ளது.  தமிழகத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னையில் நோய்ப்பரவல் வேகம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. எண்ணிக்கை அதிகமாக தெரிந்தாலும் கூட, அதற்கான காரணங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மராட்டியம், குஜராத், தில்லி, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மற்ற பகுதிகளை விட தலைநகரத்தில் தான் அதிக பாதிப்பு உள்ளன. ஊரகப் பகுதிகளில் இயல்பாக காணப்படும் கட்டுப்பாடுகள் தலைநகரங்களில் இருக்காது என்பதாலும், தலைநகரப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கையும், மக்கள் அடர்த்தியும் அதிகம் என்பதாலும்  கொரோனா வைரஸ் நோய்ப்பரவல் வேகம் சென்னையில் மிகவும் அதிகமாக உள்ளது. நோய்த்தடுப்பு  உத்திகளை மாற்றியமைத்து செயல்படுத்துவதன் மூலம் தான் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தீவிர நோய்பாதிப்பு (Containment Area) பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் போதிலும், அந்தப் பகுதிகளைத் தாண்டி நோய் பரவத் தொடங்கி விட்டதை அறிய முடிகிறது. இதைக் கட்டுப்படுத்த  அதிக எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்களை களமிறக்கி, வீடு வீடாக சென்று எவருக்கேனும் கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கொரோனா சோதனை உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்த வழியாகும். கொரோனா பாதிப்பை அறிய சென்னையில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக  மாநாகராட்சி தரப்பில் கூறப்படும் போதிலும், அக்கணக்கெடுப்பு முழுமையானது அல்ல. வீடு, வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை ஒரு முறை குறித்துக் கொண்டு, அடுத்தடுத்த நாட்களில் அதே பட்டியலை மறு உருவாக்கம் செய்து தரும் பணியாக, பெயரளவில் மட்டுமே அது நடைபெறுகிறது.  அந்த ஆய்வின் மூலம் கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க முடியாது என்பதால், கொரோனா குறித்த பொது அறிவு கொண்ட பணியாளர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

சென்னையில் அதிக எண்ணிக்கையில் நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதற்கு கொரோனா ஆய்வுகளின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கு 3300 என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருப்பதும் காரணம் ஆகும். இந்த எண்ணிக்கையை முதலில் இரு மடங்காகவும், அடுத்த சில நாட்களில் மூன்று மடங்காகவும் அதிகரித்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அதனால் மக்களிடம் அச்சம் ஏற்படாமல் தடுக்க அதற்கான காரணங்களை அரசு விளக்க வேண்டும்.

சென்னையில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி  மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  சித்த மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். எந்தத் தேவைக்காகவும் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியும். எனவே, வீடு வீடாக ஆய்வு, அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், சமூக இடைவெளியை பராமரித்தல் – கபசுரகுடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.