சென்னை முழுக்க மிகப்பெரிய போராட்டம்; அண்ணாமலை எச்சரிக்கை!

Filed under: அரசியல்,சென்னை |

இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று திருச்சி செல்லப் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகளில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ஆத்திரமடைந்து பயணிகள் புகார் அளித்து, பேருந்துகளை சிறைப்பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, “நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள், ஊருக்குச் செல்லப் பேருந்துகள் இல்லாமலும், இருந்த ஒன்றிரண்டு பேருந்துகளும் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததால் பயணிக்க முடியாமலும் நள்ளிரவில் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். குழந்தைகள், தாய்மார்கள் வயது முதியவர்கள் என 100க்கணக்கான பயணிகள் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தவித்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாக தயாராகும் வரை பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்; விரைவில் சென்னை முழுக்க மிகப்பெருமளவில் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எந்த வித முறையான ஏற்பாடுகளும் செய்யாமல், அவசரகதியில், பேருந்து நிலையத்தை சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிளாம்பாக்கத்துக்கு மாற்றிய திமுக அரசு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து நாற்பது நாட்கள் கடந்தும், இன்னும் பயணிகள் தினம் தினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.