சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !!

Filed under: சென்னை,தமிழகம் |

துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈகே-0542 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது முர்சின் இப்ராகிம், 42,  பரக்கத் அலி சதுருதீன், 45, ஆகிய பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வாயிலில் இடைமறிக்கப்பட்டனர்.

அவர்களை விசாரித்த போது தங்கப் பசையை மறைத்து வைத்து எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களை சோதனையிட்டபோது 166 கிராம் எடையுடைய இரண்டு பொட்டலங்களில் இருந்து 146 கிராம் எடையுடைய தங்கம் கண்டறியப்பட்டது. மேலும் 66 கிராம் எடையிலான இரண்டு தங்கத் துண்டுகளும், 30 கிராம் எடையிலான ஒரு தங்கச் சங்கிலியும் கண்டறியப்பட்டன.

ரூபாய் 12.8 லட்சம் மதிப்புடைய மொத்தம் 241 கிராம் 24 கேரட் தங்கம் அவர்களிடமிருந்து சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
வியாழக்கிழமையன்று, துபாயிலிருந்து ஃபிளை துபாய் விமானம் (எஃப் இசட் 8517) மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஜபீர் கான்,  அபூபக்கர் சித்திக் ஆகிய பயணிகள் வெளியே செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களை சோதனையிட்டபோது  இரண்டு பொட்டலங்களில் இருந்து 574 கிராம் எடையுடைய தங்கம் கண்டறியப்பட்டது. ரூபாய் 24.5 லட்சம் மதிப்புடைய மொத்தம் 472 கிராம் தங்கம் அவர்களிடமிருந்து சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூபாய் 37.3 லட்சம் மதிப்புடைய மொத்தம் 713 கிராம் 24 கேரட் தங்கம் மேற்கண்ட நபர்களிடமிருந்து சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்