தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றி எழுதி தராததால் மகனே தாயை அடித்து கொன்றுள்ளார்.
கர்நாடகாவின் தார்வாயைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி சாரதா பஜந்திக்கு ராஜேந்திரா என்ற 40 வயது மகன் உள்ளார். சாரதா பெயரில் சில சொத்துக்கள் உள்ள நிலையில், அவர் கணவரை இழந்தவர் என்பதால் விதவைகள் உதவித் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. ராஜேந்திரா இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததோடு தாயாரின் உதவித்தொகையையும் பிடுங்கி வைத்துக் கொண்டு செலவு செய்து வந்துள்ளார். மேலும் சாரதாவின் சொத்துக்களையும் தன் பெயரில் எழுதி வைக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது. சமீபத்தில் அவ்வாறாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராஜேந்திரா அங்கிருந்த இரும்புக்கம்பியை எடுத்து சாரதாவை இரக்கமின்றி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாரதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பின்னர் போலீஸ் கைதுக்கு பயந்த ராஜேந்திரா வீட்டுக்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலையும் செய்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து இருவர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.