ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா தான் பிரச்சாரம் செய்த மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கிரோடி லால் மீனா அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில், 7 மக்களவை தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என கூறியிருந்தார். அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே, தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார். கிரோடி லால் அலுவலகத்துக்கு வராததால் அவர் துறை சார்ந்த பட்ஜெட் திட்டங்களை இறுதி செய்வதில் தாமதமானது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். 10 நாட்களுக்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை கிரோடி லால் மீனா கொடுத்துவிட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.