ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்!

Filed under: அரசியல்,தமிழகம் |

டில்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி டில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. இப்போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்தார். போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் மார்ச் 8ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைதாகியுள்ள ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டில்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்து எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.