வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழிக்கேற்ப அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி சுவற்றில் துளையிட்டு கைதிகள் தப்பியுள்ளனர்.
“ஷஷாங்க் ரெடெம்ப்சன்” என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஆண்டி தான் சிறைவைக்கப்பட்டிருக்கும் அறையின் சுவரை கொஞ்சம் கொஞ்சமாக துளையிட்டு கிளைமேக்ஸில் அதிலிருந்து தப்பி சென்று விடுவார். அதுபோன்று உண்மையாகவெ தற்போது ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள சிறைச்சாலையில் கடந்த 20ம் தேதியன்று சிறை கைதிகளை எண்ணியபோது இருவர் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. உடனடியாக சிறை முழுவதும் தேடியதில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல் துலக்கும் பிரஷ்ஷை கொண்டு சுவரை மெல்ல குடைந்து அதன் வழியாக அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. உடனடியாக சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தேட தொடங்கியுள்ளனர். அங்கிருந்து தப்பித்த அந்த கைதிகளின் பெயர் ஜான் கார்ஸா மற்றும் ஆர்லே நீமோ. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பான் கேக் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.