திருச்செங்கோட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி காலி செய்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
40 வருடங்களாக திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ளது. அங்குள்ள பொதுமக்கள் பெண்கள் என சுமார் 5000க்கும் மேற்பட்டவர்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் டெபாசிட்டாளர்கள் கணக்காளர்கள் பொதுமக்கள் இடம் கொடுத்தவர்கள் என யாருக்கும் எந்தத் தகவலும் கொடுக்காமல் இரவோடு இரவாக தபால் நிலையத்தை காலி செய்து விட்டனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் எந்த தகவலும் கொடுக்காமல் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென காலி செய்ததை கண்டித்தும் தங்களது பகுதிக்கு அவசியம் தபால் நிலையம் வேண்டும் என வலியுறுத்தியும் 5வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கீ.ஜி.ராஜா தலைமையில் திருச்செங்கோடு தலைமை தபால் நிலைய அலுவலர் இந்திராவிடம் மனு கொடுக்க வந்தனர். மத்திய அரசின் முடிவு என்பதால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் நாமக்கல்லில் உள்ள கண்காணிப்பு அலுவலரிடம் மனு கொடுக்க வேண்டும் என கூறி மனுவை பெற மறுத்தார். இதனால் வெகுண்டு எழுந்த பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் முன்பு 7 பெண்கள் உட்பட 50 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.