தமிழகம் தொடர்ந்து முதலிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக அறிக்கை !!!

Filed under: அரசியல்,தமிழகம் |

இ-சஞ்சீவனி ஓபிடி சேவையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலையை கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் முதலமைச்சரால் மே மாதம் 13-ந்தேதி இ சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இச்சேவையை பயன்படுத்த esanjeevaniopd.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது esanjeevaniopd என்ற ஆன்ட்ராய்டு செயலி ்மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்து மருத்துவருடன் தொடர்பு கொண்டு காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம். மேலும் மருத்துவரின் மின்னணு பரிந்துரை சிட்டு தனியரின் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியார் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் இத்திட்டத்தில் பொதுமக்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் ஆலோசனை பெறலாம்.
வெளியில் செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதால் இதனை தடுப்பதற்கும், கொரோனா போன்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு உரிய பயிற்சிக்கு பின்னர் 865 அரசு மருத்துவர்களை ஈடுபடுத்தி இச்சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவிலேயே அதிகபட்ச எண்ணிக்கையில் மருத்துவர்களை ஈடுபடுத்தியும், அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இச்சேவையை வழங்கியதிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தகட்டமாக அரசு சிறப்பு மருத்துவர்களும், உயர் சிறப்பு மருத்துவர்களும் இச்சேவையை வழங்க உள்ளனர். இதுவரை 2,03,286 பயனாளிகள் இச்சேவையின் மூலம் பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதோடு மட்டுமல்ல இச்சவாலான சூழ்நிலையில் பொதுமக்களக்கு தரமான மற்றும் எளிதில் மருத்துவ சேவை கிடைக்க இத்திட்டம் வழிவகுக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் செய்திகளை புதிய கோணத்தில் தெரிந்துகொள்ள நமது நெற்றிக்கண் சமூகவலைத்தள பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.