தமிழ்நாட்டின் நீர்நிலை குறித்து சசிகலா கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

சசிகலா தமிழ்நாடு தண்ணீர் இன்றி பாலைவனமாக மாறும் அவல நிலைக்கு கொண்டு செல்லும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “விவசாயம் அழித்து மக்களை குடிக்க நீர் இன்றி செத்து மடியும் நிலைக்கு தள்ளியதைதான் திமுக தலைமையிலான அரசின் ஒப்பற்ற சாதனையாக இன்றைக்கு பார்க்க முடிகிறது. நமது நாட்டை சுற்றி சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் நம்மை ஆட்கொள்ள துடிக்கிறார்கள். ஆனால் உள்நாட்டிலேயே தண்ணீர் தர மறுத்து நமது மாநிலத்தை அழிக்க நமது அண்டை மாநிலத்தவர்கள் முயல்வது பெரும் வேதனையாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தை மட்டும் மனதில் இறுக பிடித்துக்கொண்டுள்ள இந்த விளம்பர திமுக அரசு விவசாயிகளைப் பற்றியோ, மக்களின் குடிநீர் ஆதாரத்தைப் பற்றியோ எவ்வித கவலையும் இல்லாமல் சுயநலப்போக்கோடு செயல்பட்டு வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக மக்களின் உரிமைகள் பறிபோவதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், நாடாளுமன்ற தேர்தலை மட்டும் மனதில் வைத்து செயல்படும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தை வஞ்சிக்க துடிக்கும் அண்டை மாநில ஆளும் கட்சியினர் திமுகவினரின் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் தான். இருப்பினும், தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. தமிழக மக்களையும், விவசாய பெருங்குடி மக்களையும் காப்பாற்றுவதற்கு, திமுக தலைமையிலான அரசு எந்தவித முயற்சியும் எடுக்காதது மிகவும் வேதனை அளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்திற்கு நீர் வரும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற தமிழகத்தின் சிறப்புக்கள் வரலாற்று பக்கங்களில் காணாமல் போய்விடும். எனவே தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.