மாநில மகளிர் ஆணையம் சென்னையில் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கருணாநிதி மகன் ஆண்டோ வீட்டில், 18 வயது இளம் பெண் ஒருவர், பணிபுரிந்து வந்தார். அப்பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்ததாகவும், அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திமுக எம்எல்ஏவின் மகன் ஆண்டோ, அவருடைய மனைவி மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இருவரும் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆந்திராவில் பதுங்கி இருந்த திமுக எம்எல்ஏ மகன், மருமகளை தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இந்நிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பணிப்பெண்ணின் சொந்த ஊரில் இல்லத்திற்கு நேரடியாக சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.