ஓடும் பேருந்தில் இருந்து நடத்துனர் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது.
திருச்சியில் அரசு பேருந்தில் நடத்துனர் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்த நிலையில் திடீரென பேருந்து வளைவில் திரும்பியது. அப்போது நடத்துனர் இருக்கையின் போல்ட்டுகள் கழன்றதால் அவர் இருக்கையோடு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு நடத்துனரை சென்று பார்த்த போது அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாமல் நடத்துனரின் இருக்கை போல்ட்டுகள் துருப்பிடித்து இருந்ததால் அரசு பேருந்து வளைவில் திரும்பியபோது இருக்கையில் உள்ள போல்டுகள் கழண்டு தூக்கி வீசப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் ஓட்டுநர், நடத்துனர் மட்டுமின்றி பயணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு பேருந்துகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அரசு பேருந்துகளில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கிறது என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது.