துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் நிறைய ஓணம் திருநாள் வழி காட்டட்டும் – மருத்துவர் இராமதாசு

மக்களை நேசித்த மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும்  திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக  கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். இந்த நாள் மகாபலி  மன்னனை மட்டும் வரவேற்பதற்கான நாள் அல்ல… வாழ்க்கையில் நாம் அனுபவித்து வரும் துன்பங்களை,  விலக்கி இன்பங்களையும் வரவேற்பதற்கான நன்நாள் ஆகும். அந்த வகையில் ஓணத்தை வரவேற்போம்.

திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் திருநாளுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. அறுவடைத் திருநாள் என்றும் போற்றப்படும் ஓணம் திருநாளை நமது பாண்டிய நாட்டு மக்கள்  10 நாட்களுக்கு எவ்வாறு கொண்டாடினார்கள் என்பது குறித்து பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரை காஞ்சியில் மாங்குடி மருதனார் விரிவாக விளக்கியிருக்கிறார். ஓணம் திருநாள் கொண்டாடப்படும்  விதம் குறித்து தேவாரத்தில் சம்பந்தரும் விவரித்திருக்கிறார். ஓணம் திருநாள் உழைப்புக்கு கிடைத்த பயனை வரவேற்கும் வகையில் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டங்களுடனும் கழிக்கப்படும் திருவிழாவாகும்.

ஓணம் திருநாளைக் கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அது நிறைவேறும் வகையில் துன்பங்கள் விலகி இன்பங்கள் நிறையவும், மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு கிடைக்கவும்  ஓணம் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.