கோவை, மே 12
வே மாரீஸ்வரன்
கொரோனா வைரஸ் தொற்று பேரிடராக தொடங்கியதிலிருந்து தி.மு. கழகம் பொதுமக்களின் உதவி எண் என்ற முயற்சியின் மூலம் தமிழக மக்களின் அவசர கோரிக்கைகளை சேகரித்து அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு செயல்பட்டு வருகிறது.
இம் முயற்சியின் மூலம் ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் மேலானவர்கள் எங்களை தொடர்பு கொண்டு தங்களின் கோரிக்கைகளை எங்களிடம் எழுப்பி உள்ளனர். அதில், பல அத்தியாவசிய தேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து கோரிக்கைகளையும் எங்கள் சக்திக்கு உட்பட்டு முடிந்தவரை பொதுமக்களுக்கு நிறைவேற்ற கழக தொண்டர்கள் பொதுமக்களுடன் இணைந்து இரவு பகலாக அயராது உழைத்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு தொடர்ந்து உதவிகளை நாங்கள் செய்யும் அதேவேளையில் துயரத்தில் வாடும் பொது மக்களின் குரலாக செயல்பட்டு அவர்களின் கோரிக்கைகளை கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அரசாங்கத்தின் அதிகாரத்தையும் செயல்திறனையும் கொண்டு பொதுமக்களின் துயரை திறம்பட தீர்த்து அவர்களின் துன்பங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
உதவி என் மூலமாக கோவை மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடத்தில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை உரிய தகவல்களுடன் உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து காலதாமதம் ஏற்படாமல் உடனடியாக துறைசார்ந்த அதிகாரிகளை கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இக்கட்டான நேரத்தில் துன்பத்தில் இருக்கும் தமிழக மக்களுக்கு தி.மு. கழகம் தொடர்ந்து ஆதரவளிக்கும். அதேசமயம், உங்களின் உடனடி நடவடிக்கை இன்னும் பலர் குடிமக்களின் துயரத்தையும் துன்பத்தையும் தீர்க்க உதவிகரமாக இருக்கும் என்று தி.மு. கழகத்தின் சார்பில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கார்த்திக் எம்.எல்.ஏ. மற்றும் கோவை வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி. ஆர். ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கோவை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் இன்று 12 5 2020 நண்பகலில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாமணியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.