துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் 9500 பலி!

Filed under: உலகம் |

கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9,500 பிணங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஏராளமான மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. பூகம்பம் நிகழ்ந்த முதல் நாளிலேயே அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் பத்தாயிரம் பேர் வரை இந்த பூகம்பத்தில் உயிர் இழந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்தது.
பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட சிறுமி “இதுல இருந்து வெளிய எடுங்க.. அடிமையா கூட இருக்கோம்” என்று கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை கலங்க செய்துள்ளது. சிரியாவின் எல்லைப்பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சிறுமி ஒருவரும், சிறுமியின் தம்பியும் சிக்கியுள்ளனர். யாராவது தங்களை மீட்பார்கள் என 24 மணி நேரத்திற்கும் மேலாக அதில் சிக்கி கிடந்த இருவரும் கடைசியாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் அவர்கள் சிக்கி இருந்ததால் அவற்றை அகற்றும் வரை மீட்பு பணியில் இருந்தவர்கள் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். தனது தம்பியின் தலைமேல் இடிபாடுகள் விழாமல் கையால் மூடிக்கொண்டிருந்த அந்த சிறுமி “எங்களை எப்படியாவது இதிலிருந்து வெளியே எடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறோம். வாழ்க்கை முழுக்க அடிமையாக இருக்கிறோம்” என கெஞ்சும் தோனியில் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த சிறுமியின் பெயர் தெரியவில்லை. சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் வைத்துக் கொண்டு அந்த சிறுமி பேசியது பலரையும் கண் கலங்க செய்துள்ளது.