தொடர்ச்சியாக மூன்று தோல்வி இதுவே கோலிக்கு முதல்முறை!!

Filed under: விளையாட்டு |

விராட் கோலியின் தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணி முதன்முறையாக 3 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்துள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்றது. இதில் 2-வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இது டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக 3-வது தோல்வி.

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்திப்பது இதுவே முதன்முறை.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக 2015-இல் பொறுப்பேற்றார் விராட் கோலி.
அதன்பிறகு, 2018-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், இங்கிலாந்துக்கு எதிராகவும் தலா ஒரு முறை 2 ஆட்டங்களில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது. நிகழாண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது.


நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் அடிலெய்ட் டெஸ்ட்தான். இதன்மூலம், நியூஸிலாந்துக்கு எதிராக 2 ஆட்டங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் என மொத்தம் 3 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது இந்திய அணி.
நியூஸிலாந்துக்கு எதிரான தோல்விக்கு முன்பு, இந்திய அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டமும் அடங்கும்.