கோவை, ஏப்ரல் 25
வே. மாரீஸ்வரன்
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.
இந்நிலையில், கோவையில் இயங்கும் சில தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குரிய முழு ஊதியத்தையும் வழங்க மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். ஆனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை முழுமையாக வழங்கவில்லை எனவும் ஒரு சில நிறுவனங்கள் ஊழியத்தின் ஒரு பகுதியினை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. இது மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் உத்தரவினை மீறிய செயலாகும். எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குரிய ஊதியத்தினை அரசு அறிவுறுத்திய படி முழுமையாக வழங்கிட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குரிய முழு ஊதியத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வரப்பெற்றதைத் தொடர்ந்து மேற்காண் சம்பவங்களை தடுத்திட ஏதுவாக ஊரடங்கு காலம் முடியும்வரை மையத்திற்குட்பட்ட பகுதிகளில் பணி புரியும் அங்கன்வாடி பணியாளர்களை ( தற்காலிகமாக ) ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடி பணியாளர்களின் தொலைபேசி எண்கள் www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளது.
எனவே பொதுமக்கள் குடும்ப வன்முறைகள் குறித்து அங்கன்வாடி பணியாளர்களை மேற்காண் இணையதளத்தில் உள்ள தொலைபேசி வழியாக அவர்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பொருள் குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் சார்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஆலோசகர்கள்/ பாதுகாப்பு அதிகாரிகள் / மாவட்ட சமூக நல அலுவலர்களுக்கு தெரிய படுத்துவார்கள் என்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.