இந்திய அணியின் கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணி 100வது வெற்றியை இன்று ருசித்தது !
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை வீழ்த்தியது. இதுவரை தோனி தலைமையில் இந்திய அணி, 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 100 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 69 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.
மெல்பர்னில் இன்று தோனி தலைமையில் இந்திய அணி கண்டது 100வது வெற்றி ஆகும். இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்கள் வரலாற்றில், முதல் முறையாக 100வது வெற்றியை பெற்ற ஒரே கேப்டன் தோனிதான்.
அதோடு உலகக் கோப்பையில் தொடர்ந்து 11 போட்டிகளில் இந்திய அணி தோனி தலைமையில் வெற்றி பெற்றுள்ளது. எதிரணியை தொடர்ந்து 7 முறை ஆல்அவுட் ஆக்கிய அணியின் கேப்டன் என்ற புதிய சாதனைகளையும் தோனி படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் இதுவரை இந்திய அணி தோனி தலைமையில் 16 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 14 வெற்றிகளை ருசித்துள்ளது. ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்திற்கு முடிவு கிடைக்கவில்லை. அந்த வகையில் வெற்றி விகிதத்தில் தோனிதான் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 29 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 26 வெற்றிகளை பெற்றுள்ளார்.கங்குலி தலைமையில் இந்திய அணி 11 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 9 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் இந்திய அணி கண்டுள்ளது.