நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

Filed under: இந்தியா,தமிழகம் |

நாளை தொடங்கவிருந்த நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தற்போது வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து பிரதமர் மோடி டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பயணக் கட்டணமாக 7,670 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், தொடங்கிய இரண்டாவது நாளே கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனையடுத்து கனமழையால் இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதன் பின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் மே 11-ம் தேதி கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் மே10-ம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட கப்பல் வராததால் 17-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நாளை தொடங்கவிருந்த கப்பல் போக்குவரத்து சேவை தற்போது மே 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனர்.