நினைவில்லமாக மாற்றப்படும் வேதா இல்லம் – முட்டுக் கட்டை போடு ஜெ தீபா!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த அவரது வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்பட உள்ளதற்கு ஜெ தீபா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது வேதா இல்லத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார். அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்த நிலையில் தற்போது அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என அதிமுக தொண்டர்களும் தலைமையும் விரும்புகிறது.
வேதா இல்லத்தை நினைவிடமாக்குவது தொடர்பாக கடந்த 22ஆம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. நினைவு இல்ல அறக்கட்டளைக்கு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும், துணைத்தலைவராக பன்னீர் செல்வமும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் ரத்த சொந்தமான தன்னிடமும், தன் தம்பியிடமும் இந்த இல்லத்தை அளிப்பதே அரசின் கடமை எனக் கூறியுள்ளார். மேலும் அந்த வீட்டை தாங்கள் நன்றாக கவனித்துகொள்வோம் எனக் கூறியுள்ளார். அந்த வீட்டில் இருந்து தங்களை மீறி ஒரு செங்கல்லைக் கூட யாராலும் பறிக்க முடியாது எனக் கூறும் அவர் இதுதொடர்பாக விரைவில் ஆளுநரை சந்தித்து பேச உள்ளதாக சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.



