நேபாளத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா சார்பில் ரூ.6,000 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேபாளத் தலைநகர் காத்மாண் டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா மரபை மீறி விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். அங்கிருந்து காரில் ஹோட்டலுக்கு சென்ற மோடியை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.
நேபாள பிரதமருடன் சந்திப்பு
அதைத் தொடர்ந்து பிற்பகலில் நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
பொருளாதாரம், நீர் மின் திட்டங்கள், எல்லை விவகாரம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து, வேளாண்மை, உலக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
நாடாளுமன்றத்தில் சிறப்புரை
இதைத் தொடர்ந்து நேபாள நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நரேந்திர மோடி சிறப் புரையாற்றினார். நேபாள மொழி யில் தொடக்க உரையாற்றிய அவர், எம்.பி.க்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து அவர் இந்தியில் பேசியதாவது:
நேபாளம் ஒரு புண்ணிய பூமி. இங்குதான் புத்தர் பிறந்தார். இதற்கு முன்பு யாத்ரீகனாக நேபாளத்துக்கு வந்துள்ளேன். இப்போது இந்தியப் பிரதமராக மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நேபாளத்தின் உள்விவகாரங் களில் இந்தியா ஒருபோதும் தலை யிடாது. இருநாடுகளும் கங்கை, பிரம்மபுத்திரா போன்று மிக நீண்ட நெடிய உறவைக் கொண்டிருந்தும் 17 ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய பிரதமராக நான் நேபாளம் வந்துள்ளேன். இந்தத் தவறு இனிமேல் நடைபெறாது.
நேபாளத்தின் உள்கட்டமைப்பு, எரிசக்தித் திட்டங்களுக்காக ரூ.6,000 கோடி கடனுதவி வழங்கப்படும்.
சார்க் நாடுகளில் இன்னமும் வறுமை நீடிக்கிறது. இந்த அவலத் தைப் போக்க சார்க் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து வறுமைக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும்.
இந்தியாவுக்காக உயிர்த் தியாகம் செய்த கூர்க்கா வீரர்களுக்காக இந்த நேரத்தில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.