வன்முறையை தவிர்ப்போம், வறுமையை ஒழிப்போம்: கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Filed under: அரசியல்,இந்தியா |

s2014081555806-e1408077678222

68 சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாடு வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்தை எட்டும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதலில், டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் சரியாக காலை 7.30 மணியளவில் அவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்.

குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டு இல்லை

பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிய போது அவர் குண்டு துளைக்காத கூண்டுக்குள் நிற்கவில்லை. வழக்கமாக இதுவரை பிரதமர்கள் குண்டு துளைக்காத கூண்டுக்கள் நின்றுதான் கொடியேற்றி உரையாற்றுவார்கள் ஆனால் இம்முறை அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர முதல் முறையாக சுதந்திர தின கொண்டாட்டத்தை நேரில் காண பொதுமக்கள் 10,000 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நான் பிரதம சேவகன்

பிரதமர் நரேந்திர மோடியின் முதல் சுதந்திர தின உரை மிக நீண்ட உரையாக அமைந்தது. ஒரு மணி நேரம் ஐந்து நிமிடத்திற்கு அவரது உரை நீடித்ததது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், நாட்டு மக்களுக்கு அறிவுரை என பல அம்சங்கள் மோடி உரையில் இடம்பெற்றிருந்தன. பிரதமர் மோடி, சுதந்திர தின உரையை எழுதிவைத்து படிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மோடி பேசியதாவது:

நான் உங்கள் முன் பிரதம மந்திரியாக நிற்கவில்லை, பிரதம சேவகனாக நிற்கிறேன். இந்திய சுதந்திரத்திற்காக பல தலைமுறையினர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். இளைஞர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வேளையில் எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். சுதந்திர தின கொண்டாட்டம் நம் தேசிய உணர்வை மேலும் அதிகரிக்கிறது. இந்த உணர்வுடன் நாம் நமது நாட்டை அடுத்தடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும். அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு மட்டுமல்ல. அது கருத்து ஒற்றுமையால் விளைந்த அமைப்பு.

இந்திய தேசம் தலைவர்களோ இல்லை ஆட்சியாளர்களோ உருவாக்கியது அல்ல. ஏன் அரசாங்கம் உருவாக்கியதும் இல்லை. இந்த தேசத்தை இவ்வளவு நேர்த்தியாக உருவாக்கியது விவசாயிகளும், தொழிலாளர்களும், பெண்களும், இளைஞர்களும், தீர்க்கதரிசிகளும், விஞ்ஞானிகளுமே ஆவர். இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த முந்தைய அரசுகளுக்கும், பிரதமர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒன்றாக சிந்தித்து தேசத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதி மேற்கொள்வோம். மத்திய அரசு அது வகுத்த கொள்கைகளை மட்டுமே வைத்துக் கொண்டு தனியாக செயல்பட விரும்பவில்லை. பொதுவான கருத்தொற்றுமையின் அடிப்படையில் தேசத்தை வழிநடத்தவே விரும்புகிறது. எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்படவே இந்த அரசாங்கம் விரும்புகிறது. நான் டெல்லிக்கு புதியவன். ஆனால், இங்கு வந்த பிறகு எனது பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

ஒரு அரசாங்கத்திற்குள் பல்வேறு அரசுகள் பிரிந்து கிடக்கின்றன. ஒரு அரசு அமைப்பும் மற்றொரு அரசு அமைப்பும் மோதல் போக்கை கடைபிடிக்கின்றன. இது வேதனை அளிக்கிறது. இப்படி இருந்தால் நாம் எப்படி நம் தேசத்தை ஏற்றம் பெற செய்ய முடியும். புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அரசு அலுவலர்கள் நேரத்திற்கு பணிக்கு வருவதாக செய்தி வெளியானது. அந்த செய்தி எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்வதே அரிய செய்தியாகிறது என்பதை நினைத்த போது வேதனையாக இருந்தது. நான் டெல்லிக்கு வெளியில் இருந்தே வந்திருக்கிறேன். ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் ஏராளமான திறன் கொட்டிக் கிடப்பதை உணர்கிறேன். அவற்றை ஒன்றுபடுத்தி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விரும்புகிறேன்.

நம் மூதாதையர்கள் இந்திய திருநாட்டை எப்படி எல்லாம் உருவாக்க வேண்டும் என கணவு கண்டார்களோ அந்த கனவை நனவாக்குவது நமது கடமையல்லவா? எப்போது நாம், நமது என்ற சிந்தனையை விடுத்து தேசத்தை பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏழ்மையை ஒழிக்க என்ன செய்துள்ளோம் என்பதை இத்தருணத்தில் ஆழ்ந்து சிந்திப்போம்.

பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கிறது. இத்தகைய செய்தியை கேட்கும் போது நம் தலை வெட்கிக் குணிகிறது. பெற்றோர்களாக நாம் நம் பெண் பிள்ளைகளிடம் பல கேள்விகள் கேட்கிறோம். ஆனால் எப்போதாவது ஆண் பிள்ளையிடம் எங்கே போகிறாய் என கேட்டிருக்கிறோமா? பெண் பிள்ளைகளுக்கு விதிக்கும் ஒழுக்க நெறி கட்டுப்பாடுகளை ஏன் நாம் ஆண் பிள்ளைகளுக்கு விதிப்பதில்லை? குற்றங்கள் நடைபெறும் போது சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும். ஆனால் நாமும் நமது மகன்கள் நேர்வழியில் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

வன்முறையால் நாம் இதுவரை கடந்த காலத்தில் எதையும் சாதித்ததில்லை. வன்முறையை விட்டொழிக்க வேண்டிய நேரம் இது. வன்முறைகள், மதக்கலவரங்கள் வேதனை அளிக்கின்றன. இவற்றால் யாருக்கு என்ன லாபம். ஜாதிக் கலவரமாக இருக்கட்டும், மதக்கலவரமாக இருக்கட்டும் இரண்டுமே தேசத்தின் வளர்ச்சியை தடுத்துவிடும். எனவே ஜாதி, மத மோதல்களில் ஈடுவதில்லை என உறுதியேற்போம். அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதை நாம் ஏற்கெனவே உணர்ந்திருக்கிறோம். அதே வழியில் தொடர்து செல்வோம். துப்பாக்கியால் பூமியை ரத்தச் சிவப்பாக்கலாம். ஆனால், கைகளில் ஏர் ஏந்தினால் பூமியை பசுமையாக மாற்ற முடியும்.

நாட்டில் பெண்சிசுக் கொலை தொடர்ந்து நடந்து கொண்ட இருக்க யார் காரணம். இதனால் ஆண் – பெண் விகிதத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. சமூகம் தான் இதற்கு பொறுப்பு. மருத்துவர்களே, பெண் சிசுக்கொலைக்கு உடன்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். பெற்றோர்களே பெண் சிசுவை கொல்ல வேண்டும் என எண்ணாதீர்கள். நான் நிறைய குடும்பங்களை பார்த்திருக்கிறேன். ஐந்து ஆண் மகன் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு என்ன நன்மை செய்து விடுவார்களோ அதைவிட அதிகமாக ஒரே ஒரு பெண் பிள்ளை செய்து காட்டியதை நேரடியாக பார்த்திருக்கிறேன். நமது விளையாட்டு வீரர்கள் நம் தேசத்திற்கு நிறைய பெருமை சேர்த்துள்ளனர். அவர்களில் நிறைய பெண்களும் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய தேசத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல நல்லாட்சியால் மட்டுமே முடியும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். ஒரு காலத்தில் இந்தியா பாம்பு வித்தைக்காகவும், சித்து வேலைகளுக்காகவும் அடையாளம் காணப்பட்ட நிலைமையும் இருந்தது. ஆனால், அந்தக்காலம் மலை ஏறிவிட்டது. இப்போது இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்துள்ளது. இது ஐ.டி துறை இளைஞர்களால் சாத்தியமாயிற்று. இந்தியாவை ரயில்வே இணைக்கிறது என்று கூறுவது உண்டு. ஆனால் நான் சொல்கிறேன், இன்று இந்திய தேசத்தை இணைப்பது ஐ.டி துறையாகவே உள்ளது என்று. இ-கவர்னன்ஸ் மூலம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க முடியும்.

நாட்டில் உள்ள மிக மிக ஏழை மக்களும் வங்கி கணக்கு சேவை வழங்கப்பட வேண்டும் என்பதற்க்காக பிரதம மந்திரி ஜன் தான் திட்டம் (PM Jan Dhan Yojana) செயல்படுத்தப்படும்.

நம் நாட்டின் பலம், நம் தேசத்தின் இளைஞர்கள்தான். நம் தேசம் இளமை துடிப்பு மிகுந்த தேசம். இந்த தேசமும், உலகமும் திறன் வாய்ந்த இளைஞர்களையே தேடுகிறது. இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட வேலையை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும். இளைஞர்கள் திறன் இந்தியாவை வல்லரசாக உருவாக்கட்டும்.

உலகம் மாறிவிட்டது. மாறிவரும் காலச்சூழலில் தனியாக செயல்படுவது முடியாத காரியம். உலகத்தோடு இணைந்தே முன்னேற வேண்டும். உற்பத்தித் துறையில் முன்னேற்றம் அவசியம். இந்த வேளையில் உலக நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். வெளிநாடுகள் இந்தியா வந்து பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டும். ஆனால் அவற்றை பிறநாடுகளில் விற்றுக் கொள்ளட்டும். உலகம் முழுவதும் உலா வரும் பொருட்கள் ‘மேட் இன் இந்தியா’ ( இது இந்திய தயாரிப்பு) என்ற அடையாளத்துடன் உலா வரட்டும். அதுவே நம் கனவு. இந்தியா பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக இல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கட்டும். நம் தயாரிப்புகள் குறைபாடுகள் அற்றதாக இருக்க வேண்டும். நம் தயாரிப்புகள் சூழல் நட்பு சார்ந்ததாக அமைய வேண்டும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா துறை ஏழை மக்களுக்கு வாய்ப்புகளை அளிக்கும். நம் தேசத்தை நாம் சுத்தமாக வைக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம். டெல்லி செங்கோட்டையில் நின்று கொண்டு சுத்தம் பற்றியும் கழிவறை பற்றியும் பேசுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது அவசியமானது. நான் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன். ஏழை மக்களும் மரியாதையுடன் வாழ வேண்டும் என விரும்புகிறேன். ‘சுத்தமான இந்தியா’-வை உருவாக்க ஒரு இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் தேசத்தை அசுத்தமாக்குவதில்லை என உறுதி ஏற்றுக் கொண்டால் வேறு எந்த ஒரு அந்நிய சக்தியாலும் நம் நாட்டை அசுத்தம் செய்ய முடியாது.

பள்ளிகளில், பெண் குழந்தைகளுக்கு தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் கழிவறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு நாம் இங்கு ஒன்று கூடும்போது அனைத்து பள்ளிகளிலும் கழிவறை வசதியுடன் இருக்கின்றன என்பதை பெருமையோடு அறிவிக்க வேண்டும்.

தேசத்தை அழகாக கட்டமைக்க வேண்டுமானால் அதற்கு கிராமங்களை முதலில் சீரமைக்க வேண்டும். இதற்கு Sansad Adarsh Gram Yojana என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அக்டோபர் 11-ல் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாள் விழாவின் போது திட்ட முன்வடிவு அமைச்சர்களுக்கு வழங்கப்படும்.

திட்ட கமிஷன் உருவாக்கப்பட்ட நிலவிய காலச்சூழல் வேறு தற்போது இருக்கும் நிலைமை வேறு. இதனை கருத்தில் கொண்டு திட்ட கமிஷனுக்கு பதிலாக புதிதாக ஓர் அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அது விரைவில் செயல்படுத்தப்படும்.

வறுமைக்கு எதிராக போர் தொடுப்போம். அதை வென்றெடுப்போம். ஜெய் ஹிந்த்” இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.