பஞ்சாயத்து கிளர்க் எலும்பை முறித்த இன்ஸ்பெக்டர்!

Filed under: தமிழகம் |

திருச்சி,  மே 13

திருச்சி மாவட்டம் அமயபுரம் ஊராட்சி செயலாளராக இருப்பவர் விஜயநாதன். இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட குளத்துராம்பட்டி கிராமத்தில் கோவிட் 19 தடுப்பு மற்றும் பிளிச்சிங் பணிகளில் ஈடுப்பட்டு விட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு மேல் மறுநாள் கிருமி நாசினி பொருட்கள் தேவை என்பதால் வையம்பட்டி யூனியன் அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரை பார்த்து விட்டு அவரிடம் சில தகவல்களை சொல்லிவிட்டு, குடிமராமத்து பணிக்கான சம்பள தொகை மற்றும் கிருமி நாசினி பொருட்களை வாங்கி கொண்டு, தன்னுடைய மாருதி 800 காரில் மாலை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கார்.

இந்த நிலையில், மாலை ஆறு மணி அளவில் ஆசாத் ஹோட்டலில் கும்பலாக சிலர் நிற்க என்னவோ எதோ என்று பார்த்திருக்கார் அப்பொழுதான் அங்கே கள்ளத்தனமாக மது பாட்டில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது அந்த வழியாக வந்த வையம்பட்டி ஆய்வாளர் சண்முகசுந்தரம் இந்த காட்சியை பார்த்தவுடன் தன் ஜீப்பை நிப்பாட்ட சொல்கிறார். ஆய்வாளர் வந்தவுடன் மதுவாங்க வந்தவர்கள் அனைவரும் ஓட்டம் பிடிக்கிறார்கள். இதை கண்ட கிளார்க் விஜயநாதன். சிறிது தூரம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் காலையில் தான் ஆய்வாளரோடு சேர்ந்து கொரோனா பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார் விஜயநாதன். மாருதி வண்டியும் கிளார்க்கும் நிற்பதை பார்த்த ஆய்வாளர் சண்முகசுந்தரம் வாலண்டர்ஸ் பசங்களை விட்டு ஊராட்சி செயலாளரை வர சொல்கிறார்.

தனக்கு தெரிந்த ஆய்வாளர் தானே என்று ஊராட்சி செயலாளார்  விஜயநாதன் அங்கே செல்கிறார். அப்பொழுது ஆய்வாளர் உன் வண்டி சாவியை கொடு என்று கேட்கிறார், சார் காரில் பொருட்கள் பணம் எல்லாம் இருக்கிறது, என்று சொல்ல. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா என்று ஆய்வாளர் கேட்க, நான் பஞ்சாயத்து கிளார்க்காக இருக்கிறேன் என்று விஜயன் சொல்ல, நீ யாரா இருந்தா எனக்கென்ன, என்றவர் லத்தியால் இரண்டு மூன்று இடத்தில் விஜயனை அடித்திருக்கிறார். பின்னர் ஒன்றரை மணி நேரம் காவல்நிலையத்தில் உட்கார வைத்து அவர் மேல் டிடி கேஸ் போட சொல்லி பின்னர் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் கை வலி உயிரை எடுக்க, ஆஸ்பிடலுக்கு போய் இருக்கிறார் அப்பொழுது தான் தெரிகிறது கை எழும்பில் நான்கு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று உடனே அட்மிட்டும் ஆகிவிட்டார்.  இது சம்பந்தமாக காவல் நிலையத்திற்கும் புகார் போய்விட்டது. விஜயன் இருக்கும் சங்கத்திலும் சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது ஆனால் இது சம்பந்தமாக யாரும் ஒரு வாரம் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் விஜயன் விசயத்தில் எடுக்கவில்லை என்கிறார்கள்.

நாம் இது சம்பந்தமாக டி.எஸ்.பி குத்தாலிங்கமளிடம் பேசினோம், ‘’பஞ்சாயத்து கிளார்க் போதையில் இருந்திருக்கிறார். அவர் டிடி வழக்கு போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை அதனால் பிரச்சனை ஏற்பட்டதே ஒழிய இன்ஸ்பெக்டர் அடிக்கவில்லை என்கிறார். இருந்தாலும் இது சம்பந்தமாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.

முறையாக விசாரணை செய்து வையம்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வையம்பட்டி மக்களின் கோரிக்கை ஆகும். பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர் என்பதால் மாவட்ட கலெக்டர் சிவராசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.