சமீப காலமாக தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் 4 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகி உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் 5 அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் அங்கு பணியிலிருந்த 5 பெண் தொழிலாளர்கள் மற்றும் 4 ஆண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். மேலும் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அறிந்த சிவாசி மற்றும் சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்து குறித்து வெம்பகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.