புது டெல்லி, ஏப்ரல் 22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊடகத் துறை பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்லும், செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர், நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும், நோய் பாதித்த பிற பகுதிகளுக்குச் செல்லும்போது, சுகாதாரம் மற்றும் அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. களத்தில் உள்ள தங்களது பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்குத் தேவையான நோய்த் தடுப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஊடகங்களின் நிர்வாகங்களுக்கு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.