பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!

Filed under: இந்தியா,தமிழகம் |

 புது டெல்லி,மே 03

கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் பழங்குடியினருக்கு உதவுவதற்கும், சிறு வன உற்பத்திப் பொருள்களைச் சேகரிக்க இது உச்சபட்ச காலம் என்பதைக் கருத்தில் கொண்டும், அவற்றை விரைந்து கொள்முதல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சிறு வன உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன. 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 2020-21 நிதியாண்டுக்கான கொள்முதல் இதுவரை ரூ.20.30 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் மே 1-ஆம் தேதி 49 வன உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மாற்றி அறிவித்ததைத் தொடர்ந்து, முழு அளவிலான கொள்முதல் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும்.

மாநில அளவில் சிறு வன உற்பத்திப் பொருள்கள் கொள்முதல் பற்றிய நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள ஒரு ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. “TRIFED E- Sampark Setu” –இன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் பெயர் “வன் தன் மானிட் டேஷ்போர்ட்” என்பதாகும். அனைத்து ஊராட்சிகள், வன் தன் கேந்திரா ஆகியவற்றுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (TRIFED) 10 இலட்சம் கிராமங்கள், மாவட்ட மற்றும் மாநில அளவிலான பங்குதாரர்கள், முகமைகள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்த உத்தேசித்துள்ளது. மாநில அமலாக்க முகமைகள் இந்த அமைப்பில் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து, தங்கள் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொள்முதல் நடைமுறைகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.