தமிழக அரசு பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் உள்பட சில நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறப்படுவதால், அதிரடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் உள்ள பானிபூரி கடைகளில் அம்மாநிலத்தின் உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக சோதனை நடத்தியதில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக புற்றுநோயை உருவாக்கும் என்றும் அத்தகைய கெமிக்கல்கள் அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் விருப்பத்திற்குரிய உணவான பானிபூரி கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் பரவி வருகிறது. இந்த உணவால் புற்றுநோய் ஏற்படும் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.