மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் கவலையளிப்பதாக உள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி தினமும் கிட்டத்தட்ட 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. பல சமயங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் கொல்லப்படுகின்றனர். இப்போக்கு அச்சம் அளிப்பதாக இருக்கிறது. இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும் மனசாட்சியையும் உலுக்குகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நமது கடமையாகும். இதன் மூலமே பெண்கள் பாதுகாப்பை உணர்வார்கள். இந்த கொடூரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகப் பெரிய தண்டனையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வழக்குகளை விரைவாக முடிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு, 15 நாட்களுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும்” என்று தனது கடிதத்தில் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.