தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்புப் பணியில் அடுத்த கட்டமாக 3.1.2022 அன்று 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர் சென்னை, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை (Precaution Dose) எம்.ஆர்.சி.நகரில் நேற்று (10.1.2022) தொடங்கி வைத்தார்.
இத்தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நமது மாநிலத்தில் இதுவரை 8 கோடியே 79 இலட்சத்து 84 ஆயிரத்து 156 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 15 முதல் 18 வயதுள்ள 23 இலட்சத்து 34 ஆயிரத்து 845 மாணவ, மாணவிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசியை (Precaution Dose) செலுத்திக் கொண்டார்.
மேலும், ட்விட்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:
“நான் முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்.”