போலீசார் சிறை கைதி உள்ளிட்ட நான்கு பேரிடம் பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பெங்களூரு ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கஃபேவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் உணவக பணியாளர்கள் இருவர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டை வைத்தவர் என சந்தேகிக்கப்படும் நபரின் நடமாட்டம் அடங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொப்பி, கண்ணாடி, பேன்ட் சட்டை என நேர்த்தியாக ஆடை அணிந்து கையில் பையுடன் அந்த நபர் வேகமாக நடந்து செல்லும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. உணவகத்துக்குள் உள்ள சிசிடிவி காட்சியில் அதே நபர் கைப்பையை அங்கே வைத்துவிட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளதாகத் கூறப்படுகிறது. அந்த நபர் உணவகத்தில் பையை வைத்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அவரைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியைத் தேடும் பணி நடந்து வருகிறது. பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காவல் உயர் அதிகாரிகள், என்ஐஏ அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று நண்பகல் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், இச்சம்பவத்தை யாரும் அரசியாலக்க வேண்டாம் என்று முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஷரீக் உள்ளிட்ட 4 பேரிடம் இன்று காலை முதல் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 4 பேரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற ஆட்டோ குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.