சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் தொடர்வதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக வானிலை மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்திருந்தார். இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.