பொறியியல் கல்விக்கு 2வது சுற்று கலந்தாய்வு எப்போது?

Filed under: தமிழகம் |

24,177 மாணவர்களுக்கு பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 29ம் தேதி பொறியியல் படிப்புக்கு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த கலந்தாய்வில் சுமார் 30000 மாணவர்கள் கலந்து கொண்டனர். விருப்பமான கல்லூரி, பாடப்பிரிவு தேர்வு செய்வதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலக்கெடு முடிவடைந்து தற்போது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை இன்று மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்படும். அந்த ஆணையை பெற்றுக் கொண்ட மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஆகஸ்டு 7ம் தேதிக்குள் சேர்ந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.