17 வயது சிறுவன் சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு டிகாஸ் சாலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த 6 மாதமாக வேலைக்குச் சென்றுள்ளான். வெள்ளிக்கிழமை மாலை பாரிமுனை லோன்ஸ் ஹொயர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளான். அங்கு தனது நண்பர்கள் 3 பேருடன் அமர்ந்து சிறுவன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, நண்பர்கள் 4 பேரும் போதை ஊசி செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர் வாந்தி எடுத்து மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் நண்பர்கள் அவரை மீட்டு, இரு சக்கர வாகனத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது குறித்து போலீசார் தகவல் அறிந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அச்சிறுவனின் உடையில் போதை ஊசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் போதைப் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.