புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயர் கோவில். இக்கோவிலில் பெரியவர் முதல் சிறியவர் என அனைவரின் மனதிலும் இடம்பெற்ற கோவில் யானை லட்சுமி.
கடந்த 25 ஆண்டுகாலமாக லட்சுமி யானை இக்கோவிலில் இருக்கிறது. லட்சுமி யானை தெருக்களில் செல்லும்போது மக்கள் அதற்கு பாசமாக பழங்கள் கொடுப்பது வழக்கம். அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமிக்கு கடந்த சில ஆண்டுகள் முன்னதாக சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் லட்சுமியை தினசரி காலை நடைப்பயிற்சி அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறாக இன்று காலை நடைபயிற்சி சென்றபோது லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தது. யானை இறப்பிற்கு மாரடைப்பு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இறந்த லட்சுமி யானை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏராளமான மக்கள் கண்ணீர் மல்க லட்சுமிக்கு பூக்கள் தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான மக்கள் சூழ லட்சுமியின் இறுதி ஊர்வலம் அப்பகுதியில் நடந்தது. அனைத்து மக்களின் செல்லப்பிள்ளையான லட்சுமி யானை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.