24 மணி நேரத்தில் 6000 முறை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது.
எய்ம்ஸ் சேவையகங்கள் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்ட நிலையில், ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள பிற சுகாதார மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணையதளம் மற்றும் நோயாளிகள் தகவல் அமைப்பு மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். நவம்பர் 30 அன்று சைபர் ஹேக்கர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இணையதளத்தை 24 மணி நேரத்தில் 6000 முறை தாக்க (ஹேக்) முயன்றனர் என்று தேசிய தகவல் மையத்தின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்களின் விவரங்களைப் பற்றி கேட்டபோது, ஐசிஎம்ஆர் இணையதளத்தின் மீதான தொடர் தாக்குதல்கள் ஹாங்காங்கைச் சேர்ந்த பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட ஐபி முகவரியில் இருந்து செய்யப்பட்டதாக அதிகாரி கூறினார். முன்னதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சி கேட்டு மிரட்டினர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதால் இண்டர்நெட் சேவை முடங்கி நோயாளிகளின் தகவல்களை பயன்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறியுள்ளனர்.