வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இதில் முறைகேடுகள் நடைபெறுவதாக நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால் இதுகுறித்த மேல்முறையீட்டில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு மீண்டும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மாணவ அமைப்புகள், எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுதும் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. ஆளும் அரசு தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது வரை இந்த வன்முறை சம்பவங்களால் 17 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.



