மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு… வழக்கம்போல தமிழகத்துக்கு ஓரவஞ்சனை!
மத்திய அரசு மாநிலங்களுக்காக 5002.5 கோடி ரூபாய் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி தொகுப்பை ஒதுக்கியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசுக்கு அதிகளவில் வருவாய் தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து திரும்ப வரும் நிதி மிகவும் கம்மியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் 15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை மத்திய நிதித் துறை அமைச்சகம் விடுவித்தது. அதன்படி தமிழகத்துக்கான நிதியாக 1928.56 கோடி ரூபாய் ஒதுக்கியது.
இந்நிலையில் இந்த நிதி மிகவும் குறைவானது என தமிழகத்தில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. தமிழகத்துக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு வழக்கம்போல உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளது. இதுமட்டுமில்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியத்தொகை 5005.25 கோடியையும் மாநிலங்களுக்குஒதுக்கியுள்ளது.
அதிலும் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு 802 கோடி ஒதுக்கியுள்ளது. அது போல பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்துக்கு 295 கோடி, ஆந்திராவுக்கு 248 கோடி, கர்நாடகாவுக்கு 247 கோடி, கேரளா மற்றும் தெலங்கானாவுக்கு முறையே 111 கோடி மற்றும் 105 கோடி என ஒதுக்கியுள்ளது.