பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடும் உத்தரவை வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வழக்குகளும் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும். அவற்றை மக்களுக்கு புரியும் வகையில் அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஒரு விழாவில் பேசினார். அந்த வீடியோவை ஷேர் செய்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி “சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், மாண்புமிகு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்சி தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கு உழைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை, இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும். இந்தியாவில் பல மொழிகள் உள்ளன, அவை நமது கலாச்சார அதிர்வை அதிகரிக்கின்றன. பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற பாடங்களை மாற்று மொழிகளில் படிக்கும் வாய்ப்பை வழங்குவது உட்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவை வரவேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்பை மனதார வரவேற்கிறேன். அதுபோல உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.