அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது திடீரென்று இந்த ஆண்டு இறுதியில் நடக்குமா என்ற பட்டிமன்றம் தலைநகரில் நடக்கிறது. வருகின்ற 4 மாநில சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் ஆச்சர்யம் நடக்கலாம் என்கிறார்கள். காரணம் 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க.வின் கை மேலோங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது. உத்திரபிரதேச மாயாவதி காங்கிரசை கழட்டி விடும் எண்ணத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். முலாயம்சிங் யாதவ் அரை மனதுடன் காங்கிரசுடன் இணையலாம் என்ற கருத்து உலவுகிறதாம். காங்கிரசும் மக்கள் நலத்திட்டங்களை அதிரடியாக பெரிய அளவில் முடுக்கிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறதாம்.
மேலும் ஆதார் அடையாள அட்டை விநியோகம் எளிமைப்படுத்தப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக முழுமை அடைந்து இருக்கிறாதாம். இதனால் மக்களுக்கு நேரிடையாக வங்கியில் மான்யம் மற்றும் அரசு நிதி செலுத்தப்படுகிறது. நேரிடையாக பயன் அடைந்த மக்கள், தங்கள் நன்றிக்கடனை காங்கிரசுக்கு வாக்குகளாக அளிக்கலாம் என்று காங்கிரசில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அகில இந்திய அளவில் மோடிக்கு இருக்கும் ஆதரவு காங்கிரசில் எவருக்கும் இல்லை என்கிறார்கள். ராகுல் காந்தியின் பற்றற்ற நடவடிக்கைகள் காங்கிரசை மிரள வைத்திருக்கிறதாம்.
மேலும் பிரதமரின் இமேஜ் மிகவும் கேவலமாக இந்திய மக்களிடையே சரிந்து கிடப்பதாக தகவல்கள் பரவி உள்ளன. தற்போது பிரதமருக்காக டெல்லியில் வசிக்க வீடுதேட ஆரம்பித்து விட்டார்களாம். அடுத்தது வேட்டி கட்டிய அந்தோணியை பிரதமர் பதவிக்கு முடிவு செய்து இருக்கிறார்களாம். அந்தோணி பிரதமரானால் சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆசிய நாடுகள் இந்திய எல்லைக்குள் வெகு சாதாரணமாக வந்து இந்தியர்களை மிரட்டுவது மட்டுமின்றி, இந்திய மக்களை கொன்றும் செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்று இந்திய ராணுவத்தினர் கிண்டலடிக்கிறார்களாம். ஆகவே காங்கிரஸ் தனது துருப்புச்சீட்டாக பிரியங்கா காந்தியை இறக்க உள்ளதாக நம்பிக்கை உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நரேந்திரமோடிக்கு பிரியங்கா காந்தி சரியான பதிலடி கொடுப்பார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
அதேபோல் தமிழக அரசியல் பாராளுமன்ற தேர்தலை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளது. தங்கள் மீது கடும் வெறுப்பில் இருக்கும் விஜயகாந்த்தை காங்கிரசுடன் இணைந்து செயலாற்ற தி.மு.க. தலைமை கடும் முயற்சியில் இறங்கி உள்ளதாம். 20 பாராளுமன்றத் தொகுதிகளை காங்கிரசுக்கு கொடுத்து, அதன் மூலம் விஜயகாந்த்தை சரிகட்ட, தி.மு.க. முடிவுக்கு வந்துள்ளதாம். மேலும் வரும் 2014 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் விஜயகாந்த் கட்சியை வெற்றிபெற செய்யும் உத்தியையும் செயல்படுத்தப் போகிறார்களாம்.
பா.ஜ.க. நரேந்திரமோடியை நம்பி, தமிழகத்தில் கடைவிரித்தாலும் அதற்கு ஓட்டுபோட வாக்காளர்கள் குறைவு என்கிறார்கள். விஜயகாந்த் வேறுவழியின்றி பா.ஜ.க.வுடன் இணைந்தால் 1 பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெறலாம் என்கிறார்கள். வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் தலா 2 இடங்களில் வெற்றிபெறலாம் என்ற கணக்கு உள்ளது. ஒட்டுமொத்த ஆதரவுடன் செயல்படும் அ.தி.மு.க. 32 இடங்களில் வெல்லும் என்ற கணக்கு உள்ளது. இரும்புக்கரம் கொண்ட அ.தி.மு.க. தலைமை உடனே கட்சியில் களைஎடுக்கும் பணியை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்ற கருத்து உலவுகிறது.