பணிக்கு செல்லும் பெண்களுக்கு அ.தி.மு.க அரசின் திட்டமான அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துஉள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க அரசு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் சட்ட மன்ற தேர்தலில் வென்ற அக்கட்சியின் முதல்வர் தனது முதல் கையெழுத்தை இத்திட்டத்திற்காக போட்டார். ஆட்சிக்கு வந்த சிறிது நாட்களிலேயே இத்திட்டத்தை செயல்படுத்தவும் தொடங்கியது. இதன் மூலம் பணிக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான மகளிர் பயனடைந்தனர்.
பலகட்டங்களாக நடைபெற்று வரும் இந்த திட்டத்தில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில்,பணிக்கு செல்லும் ஏழை மகளிருக்காக இந்த திட்டம் செயல் படுகிறது. இந்த திட்டத்தில் தேர்ந்து எடுக்கப்படும் பயனாளிகளுக்கு அவர்கள் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனத்தின் விலையில் பாதி அல்லது 25000ரூ இவற்றில் எது கம்மியோ அது மானியமாக வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்:
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள துணையரிடம் பயனாளிகள் வயது, முகவரி, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, வருமான சான்று உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் பயனாளிகளை ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
சம்மந்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மண்டல அலுவகங்களில் இதற்கான விண்ணப்ப படிவங்களை இலவசமாக மக்கள் பெற்றுக் கொள்ளலாம். படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் மண்டல அலுவலகத்தில் இருக்கும் அதற்கான அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் நகர்புறங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.25000க்கு உட்பட்ட பெண்கள் மானிய ஸ்கூட்டர் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதுக்கும் மேற்பட்ட திருமணமாகத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்” இவ்வாறு கூறியுள்ளார்.