மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த 21-ம் தேதி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்கள், முன்னுக்கு பின் முரண்பாடாக உள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்ததற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உண்மை என விளக்கினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.