மூன்று நீதிபதிகளுக்குக் கொரோனா ! வழக்கு விசாரணையில் மீண்டும் வீடுகளில் இருந்து…
சென்னையில் நீதிமன்றம் வந்து வழக்கு விசாரணையில் ஈடுபட்ட மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு தளர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றங்களுக்கு வந்து வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் முன் வந்தார்கள். ஆனாலும் விசாரணை அரங்கில் நடக்காமல், நீதிபதிகளின் அறைகளிலேயே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை நீதிமன்றங்களில் 3 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய ஊழியர் ஒருவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ’இனிமேல் இரு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகள் கொண்ட அமர்வுகளும் மட்டுமே செயல்பவார்கள் என்றும், அவர்களும் தங்கள் வீடுகளில் இருந்தே வீடியோ கான்ப்பெரன்ஸ் மூலமாக அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.