புது டெல்லி,மே 21
உம்பன் புயல் பாதிப்புக் காட்சிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டர் பதிவுகளில் கூறியதாவது:
”உம்பன் புயல் பாதிப்புகளை துணிவுடன் எதிர்கொண்டதால், எனது எண்ணங்கள் ஒடிசா மக்கள் பற்றியே உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முடிந்த அளவு அனைத்து உதவிகளும் கிடைப்பதை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உறுதி செய்வர். இங்கு நிலைமை விரைவில் சீரடைய வேண்டும் என வேண்டுகிறேன்.
புயல் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். நிலைமையை உயர் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் மற்றும் அவர்கள் மேற்கு வங்க அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளைப் பார்த்தேன். இந்த சவாலான நேரத்தில், ஒட்டு மொத்த நாடும், மேற்கு வங்கத்துடன் ஒன்றிணைந்து நிற்கும். மாநில மக்களின் நலனுக்காக பிராத்திக்கிறேன். இயல்பு நிலையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.