பா.ஜ.க வரலாற்றிலேயே இளம் மாநில செயலாளராகி உச்சத்தை தொட்டுள்ளார் SG சூர்யா. மோடியுடன் பயணம், மேலிட தலைவர்களிலிருந்து, அமைச்சர்கள் வரை அனைவரிடமும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. தலைவர் அண்ணாமலைக்கும் மூத்த தலைவர்களுக்கும் நடந்த போர் ஒரு வழியாக முடிந்துள்ளது. 2024 தேர்தலை சந்திக்க தனது அணியை வலுவாக நியமித்து அரசியல் பிரவேசத்தை துவங்கி இருக்கிறார் அண்ணாமலை.
11 துணைத் தலைவர்கள், 5 பொதுச்செயலாளர்கள், 13 செயலாளர்கள் என நீளும் பட்டியலில் தமிழக பா.ஜ.க வரலாற்றிலேயே முதன்முறையாக 30 வயது இளைஞர் SG சூர்யாவை மாநில செயலாளராக நியமித்து இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி விவாதங்களிலும், சமூக ஊடகங்களிலும் துடிப்பாக இயங்கி வரும் இவர் 2012 குஜராத் சட்டசபை தேர்தல் மற்றும் 2014 பாராளுமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடியின் பிரத்யேக தொழில் நுட்ப யுக்தி குழுவில் பணியாற்றி பிரதமரின் தனி கவனத்தை ஈர்த்தவர். இன்றைய பல மத்திய அமைச்சர்களையும், மேலிட தலைவர்களையும் அந்த காலத்தில் இருந்தே நன்கு அறிந்தவர். இத்தனைக்கும் அக்காலக்கட்டத்தில் இவர் சட்டக்கல்லூரி மாணவராக இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சிறு வயதில் இருந்தே அங்கமாக இருக்கும் இவர் பல ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களையும் முடித்துள்ளார்.
தனது 25 வயதில் தமிழக பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவராக பதவி வகித்த இவர், கட்சியின் இளம் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளராக பதவி வகித்து வந்தார்.
30 வயதிற்குள்ளாகவே 7 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இந்திய அரசின் இளம் தலைவர்கள் கூட்டங்களுக்காக இவர் இஸ்ரேலுக்கு 12 நாட்களும், தென் கொரியாவுக்கு 15 நாட்களும் இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். பள்ளி மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். அதே போல கல்லூரியிலும் துறை தலைவர் தேர்வில் போட்டியிட்டு வென்றுள்ளார். அண்ணாமலைக்கு அடுத்தக்கட்ட தலைவர்களை தயார் செய்வதில் டெல்லி மேலிடம் முனைப்பு காட்டி வருகிறதாம். அந்த இளம் தலைவர்களில் SG சூர்யா முதன்மையானவராக திகழ்கிறார்.