பல பொருட்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. சில பொருட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் அளிக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்தே பருப்பு கிலோ ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 2007ல் வெளிச்சந்தையில் இந்த பொருட்கள் விற்றதை விட இப்போது பன்மடங்கு விலை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, வெளிச்சந்தையில் பருப்பு கிலோ ரூ.150 வரையிலும், பாமாயில் லிட்டர் ரூ.100 வரையில் அதிகரித்துள்ளது. ஆனால் ரேஷன் கடைகளில் இன்னமும் பழைய விலைக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இதற்கான மானியத்தை அரசு அதிகரித்து வழங்க வேண்டியுள்ளது. பருப்பு மற்றும் பாமாயிலின் விலையை கொஞ்சமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. இதனால் விரைவில் பருப்பு, பாமாயில் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளது.