நடிகர் மன்சூர் அலிகான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றப் போவதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தமிழில் “கைதி,” “மாஸ்டர்,” “விக்ரம்“ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர். “கைதி,” “விக்ரம்“ மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் “மாஸ்டர்” படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பிலுள்ளது. இத்திரைப்படத்தில் தான் நடிப்பதாக உறுதி செய்துள்ள மன்சூர் அலிகான் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார். “கைதி” படமே முதலில் மன்சூட் அலிகானுக்காகதான் எழுதப்பட்டது என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதுபோல விக்ரம் படத்திலும் ‘சக்கு சக்கு வத்திக்குச்சி’ என்ற மன்சூர் அலிகான் பாடலை வைத்திருப்பார். தற்போது லோகேஷ் படத்தில் இணைந்துள்ளது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மன்சூர் அலிகான் “என் அன்பு தம்பி லோகேஷ் படத்தில் இணைவதில் மகிழ்ச்சி” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவிற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.