சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவர்களின் மேல் கார் ஒன்று கட்டுப்பாடில்லாமல் மோதியதில் மாணவர்கள் துடிதுடித்து இறந்த சம்பவம் வாணியம்பாடியில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமியர் பலர் கிரி சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். தினம்தோறும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சென்னை & பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். அவ்வாறாக வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் சர்வீஸ் சாலையில் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு சர்வீஸ் சாலையில் பாய்ந்தது. அதிவேகமாக தறிக்கெட்டு ஓடிய கார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியதில் மாணவர்கள் காற்றில் வீசியெறியப்பட்டனர்.
இதைக்கண்டு அங்கிருந்த மாணவர்கள் பலர் அலறி ஓடியுள்ளனர். கார் சாலையோரம் மோதி நின்ற நிலையில் அதில் இருந்த பெண்கள் மற்றும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கம் இருந்தவர்கள் செய்தியறிந்து ஓடிவந்து பார்த்தபோது மாணவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்துள்ளனர். மாணவர்கள் விபத்துக்குள்ளாகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு விரைந்த போலீஸ் வழக்குப்பதிவு செய்ததுடன், குற்றவாளிகளை பிடிப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் உடலை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.