சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதி, அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசும், சில இடங்களில் 55 கிலோமீட்டர் சூறைக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.