விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்!

Filed under: அரசியல் |

திமுக தேர்தலின் போது அறிவித்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டத்தை நிதிநிலைமையை சரிசெய்த பிறகு இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் நேரத்தில் கட்சியின் சார்பில் வெளியிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான் அவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது என்று கூறலாம். அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் இன்னும் தொடங்கவில்லை. எதிர்கட்சிகள் இதுபற்றி புகார் கூறி வருகின்றன. இந்நிலையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான பொருளாதார, நிதி ஆதார வழிகளை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு ஆய்வு செய்தது.

கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னிடம் மக்கள் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு மனுக்களை கொடுப்பதாக தெரிவித்தார். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவிகிதம் நிறைவேற்றம், எஞ்சிய 30 சதவீதம் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். மாநிலத்தின் நிதிநிலைமையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.